தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
கவன ஈர்ப்பு பேரணி
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் (ஜேக்டோ), 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் தொடர்பாளர் மா.ராஜசேகரன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் தொடர்பாளர் த.பொ.ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
தர ஊதியம்
பேரணியின் போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளின் விவரம் வருமாறு:–
6–வது ஊதியக்குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. அதன்படி ஊதியம் வழங்கப்படாமல் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஊதியத்துடன், தர ஊதியத்தை சேர்த்து மாநில அரசு வழங்க வேண்டும்.
6–வது ஊதியக்குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கி உள்ள அனைத்து படிகளையும், தமிழக ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும். அகவிலைப்படி 100 சதவீதம் என்ற அளவை கடந்து விட்டதால், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு, ஏற்கனவே இருந்த ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலமுறை ஊதியம்
1986–ம் ஆண்டு முதல் 1988–ம் ஆண்டுவரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களையும், 2004 முதல் 2006–ம் ஆண்டு வரை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களையும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறையில் பகுதிநேர பணிக்காலத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்பட, அனைவருக்கும் 50 சதவீத பணி காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும். தமிழ்மொழியை பாடங்களின் பட்டியலில் கடைசியில் வைத்துள்ள அரசாணையில் திருத்தம் செய்து, முதல் பாடமாக இடம் பெற செய்ய வேண்டும்.
சிறப்பு சட்டம்
தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை தமிழக அரசின் 14 நலத்திட்டங்கள் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தனி அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.
சமீபகாலமாக ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதனால் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மனநிறைவுடன் கற்பித்தல் பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. மன உளைச்சலுடன் பணியாற்ற வேண்டி உள்ளது. எனவே ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் நிதி காப்பாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.








