மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்கக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னையில் ஊர்வலம் நடைபெற்றது.
ஆசிரியர்கள் ஊர்வலம்
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) அமைப்பின் சென்னை மாவட்டம் சார்பில், ஊர்வலம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பிரபுதாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கே.சத்திய நாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மத்திய அரசுக்குஇணையான ஊதியம்
6-வது ஊதியக்குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கி உள்ள அனைத்து படிகளையும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு போல தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கவேண்டும். சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகள் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்துகிறோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவேண்டும். நிறைவேற்றாவிட்டால் நிறைவேறும் வரை போராடுவோம்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் வேலையுடன் பல பணிச்சுமைகளை சந்திக்கவேண்டி உள்ளது. அந்த பணிச்சுமைகளை தமிழக அரசு நீக்கவேண்டும். மாநகராட்சி பள்ளிகளிலும், அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தெருவுக்கு தெரு முளைக்கின்றன. சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த நிலை மாறி அரசு பள்ளிகள் அதிகரிக்கவேண்டும். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் இந்த ஊர்வலம்.
இவ்வாறு சங்கரபெருமாள் தெரிவித்தார்.
கோரிக்கை அட்டைகள்
பின்னர் ஊர்வலம் புறப்பட்டு சென்றது. ஊர்வலத்தில் ஏராளமான ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் எழும்பூர்-சிந்தாரிப்பேட்டை பாலம் அருகே சென்றடைந்தது. பின்னர் அங்கு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச்செயலாளர் இ.வாசுதேவன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜே.சொர்ணலதா, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் எஸ்.கயத்தாறு உள்பட பலர் பேசினார்கள்.








