பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி
அமையாது உலகு என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது மகளிர் தின
வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:பெண்மை வாழ்க! என்று நன்றிப் பெருக்குடன் உலகம் மகளிரை வாழ்த்தி வணங்கும்
சிறப்புக்குரிய நாள் மார்ச் திங்கள் 8-ம் நாள். கடந்த ஒரு நூற்றாண்டு
காலத்திற்கும் மேலாக உலகப் பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை
என்று வாழ்வில் அனைத்து களங்களிலும் பெற்று வரும் மகத்தான வெற்றிகளை
நினைவுபடுத்தவும், பெண்கள் வெற்றி கொள்ள வேண்டிய களங்களும், சவால்களும்
இன்னும் ஏராளமாகக் காத்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும் இந்நாள்
மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
பெண் இனம் அடைந்திருக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் என் பாராட்டுக்கள்.
அடையப் போகும் வெற்றிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணை. பெண்
எப்பொழுதும் வெற்றியின் வடிவம். பெண் தியாகத்தின் ஊற்று. பெண்மை இன்றி
அமையாது உலகு.
பெண்கள் தங்கள் முழு ஆற்றலோடும், உற்சாகத்தோடும் உழைத்து, இன்னும் எண்ணற்ற
வெற்றிகளை பெண் இனம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு என்னுடைய
நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அது போலவே, உழைக்கும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியருக்கு இனிப்பும்,
பூங்கொத்தும் வழங்குகின்ற நிகழ்ச்சியிலும் மகளிர் அணியினர் பெருந்திரளாகக்
கலந்து கொண்டு பெண்மையை வாழ்த்திடுங்கள். பெண்மை உயர உலகு உயரும்.
அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து
மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.இவ்வாறு அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா
கூறியுள்ளார்.நன்றி தினத்தந்தி