சென்னையை அடுத்த
காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக்
உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் 2.2 லட்சம்
மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தலைவர்
பி.சத்யநாராயணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம்,
அறிவியல், மேலாண்மையியல் மற்றும் கலையியல் ஆகிய பிரிவுகளில் 12 ஆயிரம்
மாணவர் சேர்க்கை இடங்களுக்காக 2.2 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வெழுத
பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1.75 லட்சம் பேர் எழுத்துத் தேர்விலும்,
சுமார் 50 ஆயிரம் பேர் கணினி மூலமும் தேர்வு எழுத உள்ளனர்.
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் கணினி வழித்தேர்வு
மற்றும் 26-ஆம் தேதி தொடங்கும் எழுத்துத் தேர்வுகளை நடத்த நாடெங்கும் 102
எழுத்துத்தேர்வு மையங்களும், 50 கணினித் தேர்வு மையங்களும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 22.7 சதவீதம் பேரும்,
கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இருந்து 15.2 சதவீதம் பேரும்,
தென்மாநிலங்களில் இருந்து 50 சதவீதம் பேரும் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்
என்றார் அவர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபீர்
கே.பக்க்ஷி, மாணவர் சேர்க்கை இயக்குநர் ஆர்.முத்துசுப்ரமணியன் உள்ளிட்டோர்
உடன் இருந்தனர்.