வரையறுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
எனினும், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு, அனைத்து சத்துணவு மையங்களும் திறக்கப்பட்டதால்
மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 42,619 சத்துணவு மையங்களில் 1
லட்சத்து 28 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 முதல் 10-ஆம்
வகுப்பு வரை படிக்கும் 54 லட்சம் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம்
கலவை சாதம் வழங்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட ஊதியம், பணி நிரந்தரம்,
ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப்
போராட்டம் நடத்தப் போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, சத்துணவு ஊழியர் சங்கங்களுடன் அரசுத்
தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சங்கங்கள் முன்வைத்த 34
கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது.
ஆனால், வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதிய உயர்வு
உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக் கூறி தமிழ்நாடு சத்துணவு
ஊழியர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்
என அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 20
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின்
தலைவர் கே.பழனிச்சாமி தெரிவித்தார். மாவட்டத் தலைநகரங்களில்
புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமையன்று உண்ணாவிரதப்
போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வேறு துறை
ஊழியர்களை வைத்தும், மகளிர் சுய உதவிக் குழுவினரை வைத்தும் சத்துணவு
மையங்கள் திறக்கப்பட்டன. இதனால், மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பணிகள்
புதன்கிழமை பாதிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தமிழக
அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
பிற வகுப்பு மாணவர்களுக்கு கலவை சாதம் வழங்கும் பணி தொடர அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட
உறுதிமொழியை ஏற்று பல்வேறு சங்கங்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக
அறிவித்துள்ள நிலையில், குழந்தைகள் நலனுக்கு எதிராக தமிழ்நாடு சத்துணவு
ஊழியர் சங்கத்தால் தொடங்கப்பட்ட போராட்டம் தேவையற்றது. தமிழக அரசால்
எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மாணவர்களுக்கு மதிய
உணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக அந்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.