உயர் கல்வி பயில அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள் முறையான
ஏற்பாடுகளைச் செய்த பிறகு அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு
வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அமெரிக்காவில் உயர்
கல்வி பயிலுவதற்காக சென்ற மாணவர்கள் சிலரை அந்நாட்டு குடியேற்றப் பிரிவு
அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்
துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸில் உள்ள சிலிக்கான் வேலி பல்கலைக்கழகம், ஃபிரெமோன்டில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்களை அந்நாட்டு குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
சம்பந்தப்பட்ட
மாணவர்கள் கல்லூரிகளின் சேர்க்கை அட்டை பெற்றிருந்தும், மாணவர்களுக்கான
உரிய நுழைவு இசைவு (விசா) வைத்திருந்தும், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்
அவர்களுக்கு நுழைவு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். இதனால், அந்த
மாணவர்கள் கல்வி பயில்வதில் தடை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸில் உள்ள சிலிக்கான் வேலி பல்கலைக்கழகம், ஃபிரெமோன்டில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்களை அந்நாட்டு குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மாகாண அனுமதியைப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்க அரசின் முறையான அனுமதியைப் பெறவில்லை என்றும், கருப்புப் பட்டியலில் அந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சேர்க்கை அனுமதியை அந்த கல்வி நிறுவனங்கள் வழங்கியிருந்த போதிலும், இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அமெரிக்க அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மத்திய வெளியுறவு அதிகாரி கூறியதாவது:
அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் முறையான நுழைவு இசைவு வைத்திருந்தும் அமெரிக்காவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விளக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இந்த விவகாரம் திருப்திகரமான வகையில் தீர்க்கப்படும் வரை, சிலிக்கான் வேலி பல்கலைக்கழகம், ஃபிரெமோன்டில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சேர்க்கை அனுமதி கோரியுள்ள மாணவர்கள் தங்களது அமெரிக்க பயணத்தைத் தள்ளிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அனைத்து இந்திய மாணவர்களும் தாங்கள் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்கள் உரிய வகையில் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அமெரிக்கா செல்லும் மாணவர்கள் பயண ஆவணங்கள் தவிர, கல்வித் திட்டங்கள், வீட்டுவசதி, நிதியுதவி, சுகாதார ஏற்பாடுகள் தொடர்பாகத் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் பயணத்தின் போது உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், அமெரிக்க குடியேற்றப் பிரிவு அதிகாரிகளின் நேர்காணல் அனுமதிக்காகவும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.