புதுடெல்லி: நிதியமைச்சகம் கடந்த மாதம்
28ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும்
மருந்துகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இறக்குமதி வரிச்சலுகை
விலக்கிக்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தது. இதனால் இந்த மருந்துகளுக்கு
இனி 22 சதவீத கலால் வரி மற்றும் இறக்குமதி வரி விதிக்கப்படும். இதனால் 76
உயிர்காக்கும் மருந்துகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.இதுபோல்
எய்ட்ஸ் நோயாளிகளுக்கான 10 வித மருந்துகள் 4 புற்றுநோய் மருந்துகள் மீதான
வரிச்சலுகையும் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறக்குமதி வரிச்சலுகை ரத்து
செய்யப்பட்டது குறித்து சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘இந்திய மருந்து நிறுவனங்கள் இத்தகைய உயிர்காக்கும் மருந்துகளை
தயாரிக்கின்றன. இதன்மூலம் உள்நாட்டு தேவை மட்டுமின்றி இந்த மருந்துகளை
200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இவர்களின் மருந்து
விலையை மருந்து விலை கட்டுப்பாட்டு நிறுவனம் கண்காணித்து வருகிறது.
அதோடு, இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில்
95 சதவீத மருந்துகளுக்கு 2.5 சதவீதம் மட்டுமே கலால் வரி
விதிக்கப்படுகிறது. எனவே மருந்து விலை பெரிய அளவில் அதிகரிக்காது. அதோடு,
உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும் இது அமையும் என்றார்.