அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு தேர்வுத்துறை நடத்திய இந்த போட்டித்தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதினர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுவெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து 'தி இந்து'உங்கள் குரல் சேவையில் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில், அறந்தாங்கி வாசகர் அருள்முருகன் கூறும்போது, ''தேர்வு நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. தாமதத்துக்கான காரணத்தை அரசு வெளியிட வேண்டும்''என்றார். இதே கேள்வியைத் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் எழுப்பி வரும் நிலையில், இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஆய்வக உதவியாளர்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.இந்த தேர்வு முறையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அல்லது எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்வுமுறை குறித்து அரசு முடிவு எடுத்த பின்னரே ஆய்வக உதவியாளர் பணி நியமன பணிகள் மேற்கொள்ளப்படும்''என்று தெரிவித்தனர்.








