தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல
ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழகம்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள் சார்பில், உறுப்பினர்கள் இடம் பெறுவர். மாணவர்களின் பெற்றோர்
ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர், செய-லர், பொருளாளர்
போன்றோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில்,
அரசியல்வாதிகள், செல்வாக்கான அதிகாரிகள், உள்ளூர் அரசியல் செல்வாக்கு
கொண்ட தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பிடியில், பெற்றோர் -
ஆசிரியர் கழகம் சிக்கியுள்ளது.
எது நடக்கிறதோ இல்லையோ, பெற்றோர் -
ஆசிரியர் கழகம் பெயரில், ரசீது அச்சடித்து, மாணவர்களிடம் வசூல் நடக்கிறது.
வெளியில், நன்கொடையும் வசூலிக்கின்றனர்.இந்த தொகைக்கு, தணிக்கையும் இல்லை;
கண்காணிப்பும் இல்லை. தலைமை ஆசிரியரும், பி.டி.ஏ., தலைவரும் என்ன கணக்கு
சொல்கின்றனரோ, அதை பெற்றோர் நம்ப வேண்டும்.
அதேபோல், உள்ளூர்
அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்கவர்கள், கவுரவ பதவிக்கு, பெற்றோர் -
ஆசிரியர் கழகத்தை பயன்படுத்துகின்றனர்.விதிகளின்படி, அந்த பள்ளியில்,
தங்கள் பிள்ளை கள் படித்தால் மட்டுமே பதவி உண்டு. பேரன், பேத்தி பெற்ற
பிறகும், பலர் பதவியை விடாமல் உள்ளனர்.
பெற்றோர் கூறுகையில்,'அரசு
பள்ளிகளில் கல்வித் தரம் சரிவதற்கு,பெற்றோர்- ஆசிரியர் கழகம் சரியாக
இயங்காதது தான், முதல் காரணம். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்
படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழகம், 'கவனிப்பதால்' அவர்களும் கண்டு கொள்வதில்லை' என்றனர்.