தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் சிறந்த தமிழ் படமாக ‘ஜோக்கர்’ தேர்வு:

திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த
தமிழ் படமாக ‘ஜோக்கர்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த
பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வைரமுத்துக்கு கிடைத்துள்ளது. தமிழ்
சினிமாவுக்கு 6 விருதுகள் கிடைத்து இருக்கின்றன.
ஜோக்கருக்கு விருது
2016–ம் ஆண்டு திரைப்படங்களுக்கான 64–வது தேசிய விருதுகள்
டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. மாநில மொழி படங்களில் சிறந்த தமிழ்
படத்துக்கான விருது ‘ஜோக்கர்’ படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை
ராஜுமுருகன் டைரக்டு செய்து இருந்தார். குரு சோமசுந்தரம்–ரம்யா பாண்டியன்
ஜோடியாக நடித்து இருந்தனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார்.
இந்த
படத்தில் ‘ஜாஸ்மீன்’ என்ற பாடலை பாடிய சுந்தரா ஐயருக்கு சிறந்த பின்னணி
பாடகருக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர்
வைரமுத்து பெற்றுள்ளார். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த
‘தர்மதுரை’ படத்தில் இடம்பெற்ற ‘எந்த பக்கம்’ என்ற பாடலை எழுதியதற்காக இந்த
விருது அவருக்கு கிடைத்து உள்ளது. இப்படத்துக்கு யுவன்சங்கர்ராஜா
இசையமைத்து இருந்தார்.
சூர்யாவின் ‘24’
சூர்யா நடித்துள்ள ‘24’ படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த திரைப்பட வடிவமைப்புக்கு ஒரு விருதும், சிறந்த ஒளிப்பதிவாளராக
திருவுக்கு மற்றொரு விருதும் கிடைத்து இருக்கிறது. 24 படத்தை விக்ரம்
குமார் டைரக்டு செய்து இருந்தார். சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான விருது
தனஞ்செயனுக்கு கிடைத்துள்ளது.
இந்த முறை தமிழ் சினிமாவுக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘ருஸ்டம்’
இந்தி படத்தில் நடித்ததற்காக அக்ஷய்குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய
விருது கிடைத்து இருக்கிறது. இவர் 110–க்கும் மேற்பட்ட இந்தி படங்களில்
நடித்து இருக்கிறார். இதுவரை தேசிய விருது பெற்றது இல்லை. முதல் தடவையாக
ருஸ்டம் படம் மூலம் அவரது தேசிய விருது கனவு நனவாகி இருக்கிறது. இந்த
படத்தில் இலியானா, ஈஷாகுப்தா ஆகியோர் நாயகிகளாக நடித்து இருந்தனர். டினு
சுரேஷ் தேசாய் டைரக்டு செய்து இருந்தார்.
உண்மை கதை
நானாவதி என்ற கப்பல் படை அதிகாரியின் வாழ்க்கையில் நடந்த உண்மை
சம்பவங்களை மையமாக வைத்து 1950–களில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை
தயாராகி இருந்தது. ரூ.65 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.200
கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் அக்ஷய்குமாரின் நடிப்பை
திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டி பேசினார்கள்.
சிறந்த
நடிகைக்கான தேசிய விருது சி.எம்.சுரபிக்கு கிடைத்து உள்ளது. ‘மினாமினுகு’
என்ற மலையாள மொழி படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் பெறுகிறார்.
சிறந்த படம்
சிறந்த படத்துக்கான தேசிய விருது ‘காசவ்’ என்ற மராட்டிய மொழி
படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது வென்டிலேட்டர்
என்ற மராட்டிய படத்தை டைரக்டு செய்த ராஜேஷ் மபுஸ்காவுக்கும், சிறந்த துணை
நடிகைக்கான விருது ‘தங்கல்’ படத்தில் நடித்துள்ள ஜாய்ரா வாசுமுக்கும்
கிடைத்துள்ளன.
மேலும் விருது பெற்ற படங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் வருமாறு:–
சிறந்த
குழந்தைகள் படம்–தனக், சிறந்த பிரபலமான படம்–சதாமனம் (தெலுங்கு), சிறந்த
அனிமேஷன் படம்–மஹோயோத ரானா (இந்தி), சிறந்த சண்டை இயக்குனர்–பீட்டர்
ஹெய்ன் (புலி முருகன்–மலையாளம்), சிறந்த பின்னணி பாடகி–இமான் சக்ரவர்த்தி.
ராஜுசுந்தரம்
சிறந்த நடன இயக்குனர்–ராஜுசுந்தரம் (ஜனதா கேரேஜ்–தெலுங்கு), சிறந்த
இசையமைப்பாளர்–பாபு பத்மநாபா (அலமா), சிறந்த எடிட்டிங்–ராமேஷ்வர்
(வெண்டிலேட்டர்), சிறந்த மாநில மொழி படங்கள்–நீர்ஜா (இந்தி), ராங்சைட் ராஜு
(குஜராத்தி), மதிபூர் (துளு), பெல்லி சூப்புலு (தெலுங்கு), தசகரியா
(மராத்தி), பிஸார்ஜன்(வங்காளம்), மகேஷின்ட பிரதிகாரம் (மலையாளம்),
ரிசர்வேஷன் (கன்னடம்).