வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்
மேலும் வலுப்பெற வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
மீனவர்கள் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்
எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் நடுப்பகுதியில்
நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று
காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.இது தற்போது தென்மேற்கு வங்கக்
கடலில் இலங்கை, தமிழகத்தின் தென் கடலோரப் பகுதி இடையே வளிமண்டல மேலடுக்கு
சுழற்சியுடன் இணைந்து நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும்
வலுப்பெற வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு பாதிப்பு இல்லைவங்கக் கடலில்
நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான
மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் இதர பகுதியில் வறண்ட வானிலையே நிலவும். இந்த காற்றழுத்த
தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவை கடந்து செல்லும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நகரும்போது கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா
இடையிலான கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று
வீசக் கூடும். எனவே, அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் அப்பகுதி
கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்
காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24
டிகிரி செல்சியஸ் இருக்கும்.இவ்வாறு இயக்குநர் பாலசந்திரன்
தெரிவித்துள்ளார்.