தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின்படி கடந்த
பிப்ரவரி 24ம் தேதி பொறியாளர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடந்தது. அதில்
தேர்ச்சி பெற்றவர்களில் தகுதியுள்ள 332 பேர் முதற்கட்ட சான்று
சரிபார்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த ஜூலை 23ம் தேதி தேர்வாணைய இணைய
தளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 10ம்
தேதிவரை இ-சேவை மையங்களில் தங்கள் சான்றுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம்
செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டாம்கட்ட சான்று சரிபார்ப்புக்கு 292 பேர்
தெரிவு செய்யப்பட்ட விவரங்கள் பட்டியல் செப்டம்பர் 19ம் தேதி இணைய தளத்தில்
வெளியிடப்பட்டது. அவர்கள் அக்டோபர் 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை இ-சேவை
மையங்கள் மூலம் சான்றுகளை பதிவேற்றம் செய்யவும் அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட
இரண்டு கட்ட சான்று சரிபார்ப்பு விவரங்கள் இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் இன்று
முதல் 14ம் தேதி வரை இணைய தளத்தில் தங்கள் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை
உள்ளீடு செய்து சான்று பதிவேற்றம் செய்யப்பட்டதின் நிலை குறித்து தெரிந்து
கொள்ளலாம். சான்று சரிபார்ப்புக்கு பிறகு தரவரிசை மற்றும் இன சுழற்சி
அடிப்படையில் நேர்காணலுக்கு தகுதியுடையவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரம் வேண்டுவோர், சந்தேகம் இருந்தால் 044-25300597
என்ற தொலைபேசி எண்ணில் இன்று தொடங்கி 14ம் தேதி வரை தெரிந்துகொள்ளலாம்.