அறிவாற்றலைவிடக் கற்பனையே ஆற்றல் வாய்ந்தது’ என்பது ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற
கூற்று. அறிவாற்றல் என்பது ஏற்கெனவே இருக்கும் கோட்பாடுகளின் புரிதலில்
உருவாவது. கற்பனை என்பதோ இருக்கும் கோட்பாடுகளை ஆராயும், அதன் எல்லைகளை
விஸ்தரிக்கும், புதிய கோட்பாடுகளை உருவாக்கும். இன்னும் சொல்லப்போனால்,
மனிதனின் கற்பனையே எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் ஆரம்பப் புள்ளி.
கற்பனைக்கும் இந்தத் தீர்ப்புக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.
‘நெகட்டிவ்’ மதிப்பெண் முறை மாணவரின் கற்பனையை முடக்கிவிடுகிறது என்பதே
நீதிபதி மகாதேவன் தீர்ப்பின் அடிப்படை சாரம்.
அழுத்தத்துக்கு உள்ளாகும் மாணவர்கள்
எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் தெரியாது. வாழ்வின் சில சூழல்களில்,
நாம் படித்தவற்றையும் தெரிந்தவற்றையும் கேட்டவற்றையும் கொண்டு,
அறிவார்த்தமாக ஊகித்து விடையைத் தேடிக்கொள்கிறோம். அதாவது, அறிவார்ந்த ஊகம்
என்பது அறிவின் ஒரு பகுதி. ‘நெகட்டிவ்’ மதிப்பெண் முறை, மாணவர்களின் இந்த
அறிவார்ந்த ஊகத்தைத் தடைசெய்கிறது. அது மட்டுமல்லாமல், ‘நெகட்டிவ்’
மதிப்பெண் என்ற கத்தி தலைக்கு மேல் தொங்குவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற
பயத்துடனேயே அவர்கள் தேர்வு எழுதும் சூழல் நிலவுகிறது. தலைக்கு மேல்
தொங்கும் இந்தக் கத்தியினால் மிகுந்த மன அழுத்தத்துக்கும் பதற்றத்துக்கும்
மாணவர்கள் உள்ளாகுகிறார்கள். மாணவர்களின் கற்பனையை நீர்த்துப் போகச்
செய்து, ஒருவித பயத்தையும் மாணவர்களின் மனத்துக்குள் விதைக்கும்
‘நெகட்டிவ்’ மதிப்பெண் முறை தேவையற்ற ஒன்று என்று நீதிபதி அழுத்தம்
திருத்தமாக தனது தீர்ப்பில் பதிவுசெய்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை அவர் உடனடியாக வழங்கிவிடவில்லை. தீர்ப்புக்குமுன்,
மனுதாரரின் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். பின்
அந்த விடைத்தாளை நன்கு ஆராய்ந்து, அதில் இருக்கும் நியாயத்தை உறுதி செய்த
பின்னரே, இந்தத் தீர்ப்பை நீதிபதி மகாதேவன் வழங்கினார். தவறாக எழுதிய
பதில்களுக்காக, சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணைக் குறைப்பது எந்த
விதத்தில் சரியாகும் என்று அந்தத் தீர்ப்பில் கேள்வியும் எழுப்பினார்.
அடுத்து என்ன?
12 வருடங்களுக்கு மேல் படித்துள்ள ஒரு மாணவரின் திறனையும் தகுதியையும்
வெறும் முன்று மணிநேரம் நடைபெறும் போட்டித் தேர்வைக்கொண்டு தீர்மானிப்பது
சரிதானா? சொல்லப்போனால், கொள்குறி (Objective) முறைப்படி நடக்கும் இந்தப்
போட்டித் தேர்வு முறை காலாவதியாகி நீண்ட நாட்களாகிவிட்டன. GRE, GMAT போன்ற
அயல்நாட்டுத் தேர்வுகள் எல்லாம் கொள்குறி முறையிலிருந்து விலகி,
‘அடாப்டிவ்’ (adaptive) தேர்வு முறைக்கு மாறிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால், ‘அடாப்டிவ்’ முறை தேர்வை இணையவழியாக மட்டுமே நடத்த முடியும்.
‘அடாப்டிவ்’ முறையில், மாணவர்கள் பதில் அளிக்கும் திறனுக்கும் முறைக்கும்
ஏற்றவாறு அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்படும். அதாவது, சரியான பதில்
என்றால், அடுத்துவரும் கேள்வி சற்றுக் கடினமாக இருக்கும். தவறான பதில்
என்றால், அடுத்துவரும் கேள்வி எளிதாக இருக்கும். இந்தியா போன்ற மக்கள்தொகை
மிகுந்த நாட்டில், ‘அடாப்டிவ்’ தேர்வுமுறைக்கு மாறுவது அவ்வளவு எளிதல்ல.
அதற்கு மிகுந்த திட்டமிடலும் நீண்டநாள் உழைப்பும் கல்விக் கட்டுமானத்தில்
முன்னேற்றமும் தேவை. ஆனால், இந்தப் புதிய இந்தியாவில், அறிவாற்றலும்
திறனும் மிகுந்து விளங்கும் இந்தியாவில் எதுவும் சாத்தியமே என்பதால்,
தேர்வுமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று நம்புவோம்.