குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக இணையவழியில் விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 22 முதல் மே 5 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நிர்ணயம் செய்யப்பட்டதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக கல்வித் துறை சார்ந்த பிரதிநிதி ஒருவரும், மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவரும், ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படுவர். இந்தச் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும்.
விண்ணப்பங்கள் அதிக அளவில் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் நடைபெறும்போது, மாவட்டக் கல்வித் துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் சென்று பார்வையிட உள்ளனர்.
இதில் முதலாவதாக ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள், மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகள் போன்றோரிடம் இருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இல்லாமல் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.








