பல்கலைக் கழகங்களின் உறுப்பு கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை
பதவிகளில் நியமிக்க கூடாது என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கும் 16க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் பணியாற்றும்
பேராசிரியர்கள் தங்கள் பணிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெறுவார்கள்.
பணிக்காலத்தில் அவர்களுக்கு லட்சத்தில் சம்பளம் கிடைக்கும். இந்நிலையில்
அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், வீட்டில் இருக்க பிடிக்காமல்
மீண்டும் பல்கலைக் கழகம் அல்லது பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில்
மீண்டும் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக விருப்ப கடிதம் கொடுத்து சேர்வது
வழக்கம். இவர்கள் கெஸ்ட் லக்சர், இன்வைட்டிங் லச்சர் அடிப்படையில் பணியில்
அமர்த்தப்படுகின்றனர்.
தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரித்தல், கற்பித்தல் பணியில் அல்லது
பாடத்திட்டம் வகுத்தல், பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி ஆகியவற்றில்
இவர்களை பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரி நிர்வாகங்கள் சேர்த்துக் கொள்வது
வழக்கம். இது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் செயல்.
இதன்படி பணியில் சேரும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக 15
ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்படும். இது தவிர அவர் சேர்ந்துள்ள
பல்கலைக் கழகம், அல்லது கல்லூரிகளில் வழங்கப்படும் சலுகைகளும் அவர்களுக்கு
கிடைக்கும். இதனால் இது போன்ற பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில்
பேராசிரியர்கள் விண்ணப்பிப்பது வழக்கம்.
இதனால், பல்கலைக் கழகம் மற்றும் அதை சேர்ந்து உறுப்பு கல்லூரிகளுக்கும்
செலவு குறைவாகிறது. இதை கணக்கில் கொண்டு நிர்வாகத்தரப்பில் ஓய்வு பெற்ற
பேராசிரியர்களையும் நியமித்து வருகின்றன. இது நிர்வாகத்துக்கு லாபமாக
இருந்தாலும், பல படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பறிப்பதாக
இருந்து வந்தது. இதற்கிடையே இது குறித்து பட்டத்தாரிகள் தரப்பிலும்
அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது
நிற்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அரசு நிதித்துறையின் சார்பில்
வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் புதியதாக எந்த பணி நியமனங்களும்
செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில்
உயர்கல்வித்துறையின் சார்பில் நேற்று அவசர ஆணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, அனைத்து
பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பியுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
சில பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களில் ஓய்வு
பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்தப் போவதாக தெரியவந்துள்ளது. இது
போன்ற செயல்கள், படித்து பட்டம் பெற்றுள்ள தகுதியான இளைஞர்களின் வேலை
வாய்ப்புக்கு தடையாக இருக்கும். இதையடுத்து, அனைத்து பல்கலைக் கழகங்களும்
ஓய்வு பெற்ற பேராசிரியர்களை காலியாக உள்ள கற்பித்தல் பணியிடங்களில்
நியமிக்க கூடாது என்று அரசு தெரிவிக்கிறது.