முதுகலை மருத்துவ மாணவர்கள் 3 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரிவது கட்டாயம்: இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவர்கள் 3 மாத காலம் மாவட்ட மருத்துவமனைகளில் கட்டாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவக் கவுன்சிலின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதுகலைப் பட்டப்படிப்பின் 3, 4 அல்லது 5-வது செமஸ்டர்களில் இதை மேற்கொள்ள வேண்டும். இது மாவட்டத்தில் தங்கிப் பணியாற்றும் திட்டம் என்று அழைக்கப்படும். படிப்பின் கடைசி செமஸ்டர் தேர்வை எழுதும் முன்னர் மாவட்டத்தில் தங்கிப் பணியாற்றி இருக்க வேண்டியது கட்டாயம். இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956-ன் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்ட அளவில் தேசிய சுகாதாரத் திட்டங்களின் விளைவுகளை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதோடு, அவற்றைக் கற்கவும் முடியும். பல்வேறு வகையான சுகாதார நிபுணர்களால் வழங்கப்படும் நோய்த் தடுப்பு, நோய்த் தீர்ப்பு மற்றும் பிற சேவைகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மருத்துவ மாணவர்கள் ஆய்வக சேவைகள் (நோயைக் கண்டறிதல்), மருந்தியல் சேவைகள், தடயவியல் சேவைகள், பொது மருத்துவக் கடமைகள், நிர்வாக மேலாண்மை ஆகியவற்றையும் கற்றுக் கொள்வர்''.
இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.