மங்களகாரகன் செவ்வாய் பகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
நெருப்புகிரகம் செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் அமர்கிறார் இதன் மூலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
செவ்வாய் ரத்தத்திற்கும் விபத்திற்கும் காரகர். உடன் பிறப்புகளுக்கும் காரகர். ராணுவம், காவல்துறை போன்ற பணி செய்பவர்களுக்கும் காரகராக திகழ்கிறார். செவ்வாய் பூமிகரகன். இவர் அருள் இருந்தால்தான் பூர்வீகச் சொத்துகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் பங்களா போன்றவை செவ்வாய் பகவானின் தயவு இருந்தால்தான் நம்மால் பெறமுடியும்.
செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் திருமண தடையை ஏற்படுத்துகிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை தருகிறது என பார்க்கலாம் அதற்கேற்ப பலன்களையும் பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குடும்ப உறவுகளிடையே உற்சாகம் பிறக்கும். வேலை செய்யும் இடத்திலும் பேச்சிற்கு மதிப்பு கூடும். செவ்வாய் 2ஆம் வீட்டில் வாக்கு ஸ்தானத்தில் நிற்பதால் கார சாரமாக பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். திருப்பரங்குன்றம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய நல்லதே நடக்கும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்குள் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் உடல் நலனில் உற்சாகம் பிறக்கும். நம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டமாகும். அதிர்ஷ்டம் தேடி வரும். வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். வீட்டில் தம்பதியரிடையே வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போனால் வீண் சண்டைகளை தவிர்த்து விடலாம். சிலருக்கு அடிவயிற்றில் வலி, கண் வலி, சின்ன சின்ன நெருப்புக் காயங்களெல்லாம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மிதுனம்
செவ்வாய் பகவான உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிக கோபம் ஆபத்தில் முடியும் என்பதால் கவனம் தேவை. நிலம், வீட்டு மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். விரைய ஸ்தானமான 12வது வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். உங்களின் வேலையில் பிறரை தலையிட விட வேண்டாம். குறை சொல்பவர்களைப் பற்றி கண்டு கொள்ள வேண்டாம். பயணத்தை ஒத்திப்போடுங்கள். இந்த காலகட்டத்தில் ரத்த தானம் செய்யுங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து விடுபடலாம். கணவன் மனைவி இடையே சில கருத்து மோதல்கள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிவப்பு நிற கர்சிப் உபயோகப்படுத்துங்கள்.
கடகம்
செவ்வாய்
பகவான் 45 நாட்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வருமானம்
அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுடைய செல்வாக்குக் கூடும். ஆளுமைத் திறனும்
அதிகரிக்கும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள்.
சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள், பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும்.
அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள்
மறையும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும்.
கணவன் மனைவி உறவில்
உற்சாகம் பிறக்கும். எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள்
காதல் பறவைகளாக சிறகடித்துப் பறப்பார்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் உறவு
பலப்படும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை தரும்.
சிம்மம்
செவ்வாய் பகவான் உங்கள் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சகோதர வகையில் நல்லது நடக்கும். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் உற்சாகமாக காணப்படுவீர்கள் என்றாலும் பணியில் கவனம் தேவை. பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும்.செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கூடும்.
கன்னி
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதால் வீட்டில் அமர்ந்துள்ளார். அதிர்ஷ்டகரமான நேரம் இது. அரசு தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். பணிசெய்யும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புரமோசனுக்காக தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். செவ்வாய் கிழமைகளில் முருகன் ஆலயங்களுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபடலாம். சிவப்பு நிற ஆடைகளை அணியலாம்.
துலாம்
செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் அமர்வது அத்தனை சிறப்பானது அல்ல. எனவே அதிக கவனமாக இருக்கவேண்டிய கால கட்டம் இது. கணவன்மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். வதந்திகளை நம்பாதீர்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பண தர வேண்டாம். பணம் கொடுக்கல்வாங்கல் விஷயத்தில் வங்கிக் காசோலை, டி.டி மூலமாக செய்வது நல்லது. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும் என்றாலும் அநாவசியப் பேச்சுகளை குறைப்பது நல்லது. சற்று சிரமமான கால கட்டம்தான் என்றாலும் பரிகாரம் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். செவ்வாய் தலமாக திகழும் பழனிக்கு சென்று மலைமேல் முருகனை தரிசனம் செய்து வர பிரச்சினைகள் தீரும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் நிற்பதால் பணபலம் கூடும். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும். உடல் சூட்டினால் வயிறு வலி வரும். கோபம், எரிச்சல் தீர முருகனை தரிசனம் செய்யலாம். செவ்வாய்கிழமை, வியாழக்கிழமைகளில் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும்.
தனுசு
உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை பெருகும். சகோதரங்களுக்கிடையே அவ்வப்போது சலசலப்புகள், பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் மற்றொரு பக்கம் மகிழ்ச்சியும், பாசமும் அதிகரிக்கும். ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்வது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.
மகரம்
செவ்வாய் பகவான் இனி ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். காதல் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். வண்ண கனவுகள் வந்து செல்லும். பணி செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி கிடைக்கும் காலம் இதுவாகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். பாதிப்புகளில் இருந்து தப்பிக்க பழனிமலை முருகனை சரணடையுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உள்ளார். டென்சன் அதிகமாக இருக்கும் காலகட்டமாகும். கணவன் மனைவி இடையே வீண் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். பணி செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சில காரியங்கள் தடைப்பட்டு முடிவடையும். முதல் முயற்சியிலேயே எந்த வேலைகளையும் முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். டென்சனை குறைத்துக்கொண்டால் வெற்றியும், அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும்.
மீனம்
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். எங்கிருந்தாவது வந்து பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...