நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதை எது தீர்மானிக்கிறது? உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?
நீங்கள் எவ்வளவு அன்புடன் இருக்கிறீர்கள்? அல்லது நீங்கள் எத்தகைய அறத்தை பின்பற்றுகிறீர்கள் என்பது கொண்டு தீர்மானிக்கப்படுகிறதா?
இத்தகைய அனுமானங்கள் ஒருவேளை சரியாக இருக்கலாம். நீங்கள் எவ்வளவு நன்றாக உறங்குகிறீர்கள் என்பதை பொருத்தே, மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள் என்பது தெரியும் என்று யுசி பெர்கலியின் புதிய ஆய்வு கூறுகிறது.
நாம் மற்றவர்களுடன் பெருந்தன்மையுடன் இருப்பதை தூக்கமின்மை குறைக்கிறது என்று புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் சோர்வாக இருக்கும் போது அவர்கள் மற்றவர்களிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறீர்கள் என்பதை சோதித்தனர்.
முதல் ஆய்வில், தன்னார்வலர்கள் 21 பேரை 24 மணிநேரம் தூக்கம் இல்லாமல் இருக்க செய்தனர். அதன் பிறகு, முகம் தெரியாத மனிதர்களின் ஷாப்பிங் பைகளைத் தூக்க உதவுவது போன்ற வெவ்வெறு சூழ்நிலைகளில் அவர்கள் உதவ தயாராக இருக்கிறார்களா என்று சோதித்துப் பார்த்தனர் ஆராய்ச்சியாளர்கள்
மேலும், இதில் பங்கேற்றவர்கள், சரியாக தூங்கி எழுந்தபோது, இதே சூழ்நிலைகள் அளிக்கப்பட்டன. இந்த 21 பேரின் மூளை செயல்பாட்டுகளின் அளவை எஃப்.எம்.ஆர்.ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
அடுத்து, இணையம் மூலம் 171 தன்னார்வலர்களிடம் தங்களின் சராசரியாக தூங்கும் பழக்கத்தை குறிப்பு எடுத்து கொள்ளுமாறு கேட்கப்பட்டன. பிறகு, அவர்களுக்கும் இதே போன்ற சூழ்நிலைகள் கேள்விகளாக அளிக்கப்பட்டன. இந்த இரண்டு சோதனைகளிலும், பொது நலப்பண்புடன் அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு, சோர்வாக இருந்த பங்கேற்பாளர்கள் குறைவான மதிப்பெண்களே பெற்றனர்.
இது பங்கேற்பாளர்கள் மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் இயல்புக்கும், அவர்கள் உதவி செய்ய நினைத்தவர்கள் அந்நியர்களா அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களாக என்பதற்கும் தொடர்பு இல்லை.
மிகவும் குறைந்த கால அளவு
கோடைகாலத்தில், அமெரிக்காவில் நேரம் மாறுவதற்கு முன்பும் பின்பும் (அமெரிக்காவில் இரண்டு விதமான நேர அமைப்பு பின்பற்றப்படுகிறது. ஒன்று, பகலொளி சேமிப்பு நேரம். இதில், கோடைகாலத்தில், கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். மற்றொரு வழக்கமாக பின்பற்றப்படும் நேரம்) செய்யப்பட்ட 3.8 மில்லியன் டாலர் நன்கொடையை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த நேரம் மாற்றத்துக்கு முன்பும், பின்பும், நன்கொடைகள் வழங்குவது 10% குறைந்துள்ளது.
இந்த (செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் - functional magnetic resonance imaging) எஃப்.எம்.ஆர்.ஐ (FMRI இமேஜிங்கை ஆய்வு செய்தப்போது, தூக்கமின்மை சமூக அறிவாற்றலுடன் தொடர்புடைய மூளையின் பகுதியில் குறைந்த செயல்பாட்டையே கொண்டிருந்தது. மூளையின் இந்த பகுதிகள்தான் மற்றவர்களுடனான நமது சமூக தொடர்புகளை வழிநடத்துகிறது.
இது மூளை செயல்பாட்டின் மாற்றம், நாம் எவ்வளவு நன்றாக தூங்குகிறோம் என்பதுடன் தொடர்புடையது அல்ல. கால அளவுடன் தொடர்புடையது மட்டுமே. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த விளைவு குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். நாம் நமது இயல்பான தூக்க முறைக்கு திரும்பியவுடன் அது மறைந்துவிடும்.
தூக்கம் மிகவும் முக்கியம்
நமது ஆரோக்கியத்திற்கு நல்வாழ்வுக்கும் தூக்கம் அடிப்படையான விஷயம் என்பது நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. 1959 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த டிஜே பீட்டர் டிரிப் , நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் 201 மணிநேரம் தூங்காமல் இருக்க முடியும் என்று நிரூபித்தார்.
அவரது இந்த சாதனையை, ஒரு பள்ளி அறிவியல் கண்காட்சி திட்டத்திற்காக, 260 மணிநேரம் (கிட்டத்தட்ட 11 நாட்கள்) விழித்திருந்து ராண்டி கார்ட்னர் என்ற இளைஞர் முறியடித்தார்.
ராண்டியும் பீட்டரும் தங்கள் அனுபவங்கள் மூலம் தாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று நிரூபித்தனர். ஆனால் அந்த சோதனையின்போது நாட்கள் செல்ல செல்ல, அவர்களுக்கு வார்த்தைகள் உளற தொடங்கின. சில சமயங்களில் அவர்கள் குழப்பமடைந்து, அடிப்படையான ஆங்கில எழுத்துக்களை வாசிப்பது போன்ற எளிய பணிகளை முடிக்கவும் கடினமாக இருந்தது.
அவர்கள் இருவருக்கும் மாயத்தோற்றங்களின் (hallucination) பிம்பங்களும் தெரிந்தன. பீட்டர் தனது காலணிகளில் சிலந்தி வலைகளைப் பார்ப்பது போன்றும், மேசையில் தீப்பிடிப்பது போன்றும் உணர்ந்தார்..
தூக்கமின்மை மாயத்தோற்றம் மற்றும் மனநோய் போன்ற மனநலப் பிரச்னைகளுடன் தொடர்புடையவை என்பதை நாம் இப்போது அறிவோம்.
பீட்டர் மற்றும் ராண்டி அவர்களின் சோதனைகளில் இருந்து மீண்டு வருவது போல் தோன்றலாம். ஆனால் நீண்டகாலத்திற்கு தூக்கமின்மை இருந்தால், அது நீண்டகால நரம்பியல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
பீட்டர் மற்றும் ராண்டியின் சோதனைகளில் இருந்து, நினைவாற்றலும், முடிவெடுப்பது போன்ற அடிப்படை சிந்தனை திறன்கள் மட்டுமல்லாமல், தூக்கமின்மை நமது நடத்தையின் பெரும்பாலான அம்சங்களை பாதிக்கிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
1988 ஆம் ஆண்டில், அசோசியேஷன் ஆஃப் புரொபஷனல் ஸ்லீப் சொசைட்டிஸ் ஸ்லீப் (Association of Professional Sleep Societies) இதழில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. சாலை விபத்துகளும், வீட்டில் ஏற்படும் விபத்துகளும் உருவாக்கும் அபாயத்தை முறையான தூக்கம் இல்லாத பழக்கம் அதிகரிக்கும் என்று எச்சரித்தது.
அமெரிக்காவில் 2015 ஆம் ஆண்டு ஆய்வில், கடிகாரங்கள் முன்னோக்கிச் செல்லும் போது கடிகாரங்கள் பகலொளி சேமிப்பு நேரமாக மாறிய பின்னர், மக்கள் ஒரு மணி நேர தூக்கத்தை இழக்கின்றனர். (அதாவது, வழக்கமாக நேரத்தில் 7 மணிக்கு எழுந்தால், பகலொளி சேமிப்பு நேரத்தில் 6 மணி எழ வேண்டி இருக்கும்). இதனால், அங்கு ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது.
கருணையும், பெருந்தன்மையும் நமது சமூக தொடர்பின் ஒரு பகுதியாகும் என்று உளவியலாளர்கள் கருதுகின்றனர். இது மற்றவர்களுடன் நாம் எவ்வாறு பழகுகிறோம், அவர்களுடன் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை முடிவெடுப்பது என்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான விஷயம்.
இந்த முடிவுகள் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை. நமது நினைவாற்றல், முந்தைய சூழ்நிலைகள் குறித்த நினைவாற்றல், நாம் முடிவுகள் எடுக்கும் விதம், எல்லாவற்றிற்கும் மேலாக நமது உணர்ச்சிகளையும் அவற்றை நாம் எவ்வளவு நன்றாக கட்டுப்படுத்த முடியும் ஆகிய காரணிகள் ஒவ்வொன்றும் நாம் எவ்வளவு நன்றாக தூங்குகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கும்.
நாம் நன்கொடை அளிக்கத் தயாராக இருக்கும் பணத்தின் அளவும் உறக்கத்தை சார்ந்தே இருக்கும்.
அடுத்த முறை ஒரு நல்ல காரியத்திற்காக, நன்கொடை அளிக்குமாறு ஒரு நண்பர் உங்களிடம் கேட்கும் போது, நீங்கள் பதிலளிக்கும் முன் தூங்குங்கள். லாரா பௌபர்ட், யுகே வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக உள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: