தயிர் நமது உணவுப்பழக்கத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். தயிர் பல தருணங்களில் உணவின் ஒரு பகுதியாகவும், சில சமயங்களில் உணவே அதுவாகவும் இருக்கும்.
தயிர் நமது உணவுக் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருக்க அதன் சுவை மட்டும் காரணமல்ல, அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளும்தான்.
தயிர் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டுமே நிறைந்த பொருளாக இருந்தாலும், தயிர் சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய பொதுவான சில தவறுகள் உள்ளது. தயிர் சாப்பிடும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில பொதுவான குறிப்புகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
இரவில் சாப்பிடக்கூடாது
இரவில் தயிர் சாப்பிடுவதால் உடலில் மந்தம் அதிகரிக்கும், இது சளி உருவாவதால் ஏற்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, தயிரில் உள்ள இனிப்பு மற்றும் புளிப்பு பண்புகள் சளி உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நாசிப் பாதைகளில் நெரிசல், மூட்டுவலி அதிகரிக்கிறது மற்றும் வீக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
தயிரை பச்சையாக சாப்பிடக்கூடாது
தயிர் எப்போதும் சர்க்கரை, தேன், வெல்லம் அல்லது உப்பு, கருப்பு மிளகு, சீரகப் பொடி போன்ற மசாலாப் பொருட்களுடன் இணைக்கப்பட வேண்டும். இது தயிரின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் சளி உருவாவதை குறைக்கிறது.
சில மாதங்களில் தவிர்க்க வேண்டும்
பலர் தினமும் தயிர் சாப்பிடுவதை விரும்புகிறார்கள், ஆனால் சில மாதங்களில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள், ஏனெனில் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேதத்தின்படி, இளவேனிற்காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலங்களில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது சளி உருவாவதற்கு வழிவகுக்கும்.
உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
உடல் பருமன், வயிறு உப்புசம், இருமல் கோளாறுகள் உள்ளவர்கள் மற்றும் வீக்கம் உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜில் வைக்க கூடாது
வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரை குளிர்சாதன பெட்டியில் ஒருபோதும் சேமிக்க வேண்டாம். ஏனென்றால், தயிரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது, அதன் நன்மைகளுடன் சேர்ந்து பாக்டீரியாவின் தரமும் குறைகிறது. அதேசமயம் சந்தை தயிர் குளிர்ச்சியின் காரணமாக அதிக கனமாகிறது, இது ஜீரணிக்க கடினமாகிறது.