H3N2 Virus Influenza: இந்தியாவில் தற்போது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகையின் துணை வகையான H3N2 வைரஸ் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சொல்லப்போனால், இந்த வைரஸ் அதிவேகமாக மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள், முதியவர்கள், இணை நோய்களைக் கொண்டவர்களை இந்த வைரஸ் விரைவில் தொற்றுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ன தான் H3N2 கொரோனாவைப் போன்று அபாயகரமானது இல்லாவிட்டாலும், இந்த தொற்றிற்கு சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், சிக்கல்களை சந்திக்க நேரிடும். கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த சீசனில் பல சுவையான பழங்கள் விலை குறைவில் அதிகம் கிடைக்கும். இந்த பழங்கள் அனைத்தும் கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் சந்திக்கும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலான பண்புகளை கொண்டவை.
முக்கியமாக இந்த கோடைக்கால உணவுகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தியைக் கொண்டதோடு, நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவிபுரியும். இப்போது கோடையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில உணவுகளைக் காண்போம்.
தர்பூசணி
கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையான பழம். இதில் ஏராளமான ஊட்டச்ச்ததுக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. கூடுதலாக, தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது கோடையில் உடல் வறட்சியடைவதைத் தடுக்கும்.
தக்காளி
கோடையில் விலைக் குறைவில் கிடைக்கும் மற்றொரு ஒரு உணவுப் பொருள் தான் தக்காளி. என்ன தான் தக்காளி அனைத்து பருவ காலங்களில் கிடைத்தாலும், கோடைக்காலத்தில் விலைக் குறைவில் கிடைக்கும். தக்காளியில் வைட்டமின் சி மற்ற உணவுகளை விட அதிகளவில் உள்ளன. இந்த வைட்டமின் சி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகின்றன.
தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன. முக்கியமாக தக்காளியை ஒருவர் சமையலலில் சேர்ப்பது மட்டுமின்றி, அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம்.
மாம்பழம்
பழங்களின் ராஜாவான மாம்பழம் ஒரு கோடைக்கால பழமாகும். இது சுவையான பழம் மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சத்தான பழமும் கூட. இப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான சத்தாகும்.
மாம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பல நோய்களை எதிர்த்து பாதுகாப்பளிக்கின்றன.
இளநீர்
இளநீர் கோடையில் தாகத்தைத் தணிக்க உதவும் அற்புதமான பானம். இது சுவையான பானம் மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் நல்லது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இவை உடலில் திரவ சமநிலையை சீராக்க உதவுகின்றன மற்றும் கோடையில் உடலை வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இளநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன மற்றும் இதில் சைட்டோகினகள் உள்ளன. இவை முதுமைத் தோற்றத்தைத் தடுப்பதோடு, புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கோடைக்கால உணவுப் பொருட்கள் பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கலாம். H3N2 வைரஸ் பரவும் தற்போதைய சூழ்நிலையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்பினால், இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வர முயற்சி செய்யுங்கள்.