சுபகிருது ஆண்டு முடிவுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் இன்று பிறந்த ஸ்ரீசோப கிருது ஆண்டு அனைவரின் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.
தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக தமிழ் புத்தாண்டு மிக முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 60 தமிழ் வருடங்களும் கணிக்கப்பட்டு ஒவ்வொரு சித்திரையிலும் ஒவ்வொரு ஆண்டாக கணக்கிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 60 ஆண்டுகள் குறித்து மிக சுவாரஸ்யமான புராண கதையும் உள்ளது. நாரதர் கிருஷ்ணர் மேல் கொண்ட காதலால் பெண்ணாக மாறி அவருடன் வாழ்ந்து பெற்ற 60 குழந்தைகள் தான் இந்த 60 தமிழ் வருடங்கள் என்கின்றன நமது புராணங்கள்
தமிழின் முதல் மாதமான சித்திரையில் சூரியன் மத்திய ரேகையில் வீற்றிருக்கிறார். சூரியனிடமிருந்தே தமிழ் ஆண்டு தொடங்கப்படுகிறது. இந்த ஆண்டு 2023 சித்திரையில் சுபகிருது ஆண்டு முடிவுக்கு வந்து ஸ்ரீசோபகிருது ஆண்டு தொடங்குகிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் தனித்த குணாதிசயம் இருப்பதாக கூறுகின்றனர் ஜோதிட வல்லுனர்கள். அந்த வகையில் சோபகிருது வருடத்தில் பிறப்பவர்கள் சகல வித மேன்மைகளை பெற்றவர்களாகவும், சாமர்த்தியசாலியாகவும் இருப்பார்கள்.
வீட்டில் பூஜை செய்யும் முறை:
சகல சௌபாக்கியங்களும் நிறைந்த வெள்ளிக்கிழமையில் இந்த வருட புத்தாண்டு தொடங்குகிறது. வீட்டைச் சுத்தம் செய்து தரையை நன்றாக கழுவி விட வேண்டும். பூஜையறை பொருட்களை நன்றாக சுத்தம் செய்து பூஜைக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும். காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து தூய உடையணிந்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். அசைவம் தவிர்த்து சாம்பார், வடை, பாயாசம் சமைத்து சாமிக்கு படைக்கலாம். காலை முதல் உணவு எடுக்காமல் விரதம் இருக்கலாம். சித்திரை மாதம் சித்திர குப்தனின் மாதம் என்பதால் பெண்கள் பலரும் சித்திர குப்தனுக்கு விரதம் இருப்பதும் விசேஷமே.
காலையில் தாம்பூல தட்டில் மா, பலா, வாழை என முக்கனிகளுடன் மற்ற
பழங்களையும் வைத்து, வெற்றிலை, பாக்கு வைத்து அதை நைவேத்தியமாக வைக்கலாம்.
மாலை நேரத்தில் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று இந்த ஆண்டு முழுவதும்
சிறப்பாக இருக்க வழிபாடு செய்வதால் மேன்மை அதிகரிக்கும்.தமிழ் புத்தாண்டு
அன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கல பொருட்களை வாங்கலாம். அஷ்ட
லட்சுமிகளை குறிக்கும் தனம், தானியம், மஞ்சள், கற்கண்டு என மங்கல பொருட்களை
வாங்கலாம். இதனால் ஆண்டு முழுவதும் சுபிட்சம் கிடைக்கும். வீட்டில்
செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.