கோரிக்கை பேரணி
தமிழ்நாடு ஆசிரியர் இயங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகையில் பேரணி நடைபெற்றது. நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அசோக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொது செயலாளர் கோவிந்தன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்து பேசினர். பேரணியில் 6-வது ஊதிய குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு
தொடக்க பள்ளிகள் முதல் மேல்நிலை நிலைப்பள்ளிகள் வரை தமிழக அரசின் சார்பில் 14 நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகின்றன. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதால், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தனியாக நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும் எனவும், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் வட்டார அளவில் ஒரு தனி அலுவலரையும் நியமிக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைகளுக்கு வழங்குவதைபோல் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை நீக்கிவிட்டு ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். தொடக்க பள்ளி முதல் உயர்நிலை பள்ளி வரை தாய்மொழியாக தமிழ்மொழி கல்வியை நடைமுறை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நாகை அவுரித்திடலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி தம்பித்துரை பூங்கா, ஏழைப்பிள்ளையார் கோவில், வெளிப்பாளையம், காடம்பாடி வழியாக நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.








