விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே
பாடியந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 300
மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு அரசால்
வழங்கப்படும் உதவித்தொகையில் முறைகேடு செய்தது, குறித்த நேரத்தில்
பள்ளிக்கு வராததது, பொதுமக்களுக்கு சான்றொப்பம் இடுவதில் அலைக்கழித்தல், சக
ஆசிரியர்களிடம் விரோத போக்கை கடைபிடித்து அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்தி
ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு
பிரச்னைகள் குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் பவானி மீது அப்பகுதி
மக்கள் சரமாரியான புகாரை கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த
நிலையில், அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர் பவானி மீது நடவடிக்கை
எடுக்காததை கண்டித்து நேற்று காலை பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து
போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில்
ஈடுபட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி கீதா, மாவட்ட கல்வி அலுவலர் சீத்தாராமன்,
இன்ஸ்பெக்டர் மோகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜான்கென்னடி, உதவி
தொடக்க கல்வி அலுவலர்கள் ஞானப்பூ, அக்சீலியம்பெலிக்ஸ் மற்றும் போலீசார்
சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது
பள்ளி தலைமையாசிரியரை இடமாற்றம் செய்வதோடு அவரை பணிநீக்கம் செய்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இதுகுறித்து விசாரணை
நடத்திய அதிகாரிகள், அங்கேயே பள்ளி தலைமையாசிரியர் பவானியை தற்காலிக
பணிநீக்கம் செய்தும், மற்ற 4 ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றவும்
உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து மாலை நேரத்தில் போராட்டத்தை கைவிட்டு
மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர்.
மாணவர்கள்
வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்ட சம்பவமும், அதிகாரிகள் ஆய்விற்கு பிறகு
ஒரே நேரத்தில் தலைமையாசிரியர் சஸ்பெண்ட், 4 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்த
சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.