விழுப்புரம் அருகே கப்பூர் ஆதிதிராவிடர்
உயர்நிலைப்பள்ளியில் -படித்துவந்தவர் 10ம் வகுப்பு மாணவி ரேகா(16).
இருதினங்களுக்கு முன்பு பள்ளி இடைவேளை நேரத்தில் வீட்டிற்குசென்று
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காணை போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே மாணவி தற்கொலைக்கு
காரணமான தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி எஸ்பி விக்ரமனிடம் ஒரு மனு
அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
சம்பவம்
நடந்த 25ம் தேதி ரேகா பள்ளிக்கு சற்றுதாமதமாக சென்றுள்ளார்.
இதனைக்கண்டித்த வகுப்பு ஆசிரியர் ரவி வகுப்பில் அனுமதிக்காமல் தலைமை
ஆசிரியரிடம் அழைத்துச்சென்று புகார் கூறியுள்ளார். உடனே தலைமை ஆசிரியர் மணி
மேகலை ரேகாவை சக மாணவ, மாணவிகள் மத்தியில் தகாத வார்த்தைகளால்
திட்டியதாகவும், தாய்தந்தையையும் இழிவாக பேசியதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு ரேகாவை வகுப்புக்குள் அனுமதிக்காமலும், தேர்வு எழுதவிடாமலும்
வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் உடலுக்கு
தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழப்புக்கு காரணமான தலைமை
ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காணை
காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் சந்தேக மரணம் என
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
இவ்விஷயத்தில் தலையிட்டு தலைமை ஆசிரியர் மணிமேகலை, ஆசிரியர் ரவி மீது கொலை
வழக்கு பதிவு செய்து கைது செய்வதோடுமட்டுமல்லாமல் துறை ரீதியான நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். மகளை இழந்துவாடும் முருகன், சிவகாமி
தம்பதியினருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஏழை, ஆதிதிராவிடர்
குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமும், மூத்தமகள்
கவிதாவுக்கு அரசுப்பணியும் வழங்கி அக்குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுஅளிக்கும்போது ரேகாவின் பெற்றோர்கள்,
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலியன், வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.