இதுகுறித்து நாஸா விஞ்ஞானிகள் கூறியதாவது:
தமிழகத்தில் விண்கல் வெடித்து இளைஞர் உயிரிழந்ததாக இணையதளத்தில் படங்கள் வெளியாகின.
அந்தப் படங்களை ஆய்வு செய்ததில், அது விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட வெடிப்பாகத் தெரியவில்லை. பூமியில் இருந்த ஏதேனும் மர்மப் பொருள்
வெடித்துச் சிதறியதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையே அந்தப் படங்கள்
பிரதிபலிக்கின்றன என்று நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்ததாக, "நியூயார்க்
டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே உள்ள
தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மர்மப் பொருள்
வெடித்துச் சிதறியது.
இதில், கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் காமராஜ் என்பவர் உயிரிழந்தார்; மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
விண்கல் விழுந்து வெடித்ததானாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், உலக
வரலாற்றில் விண்கல் விழுந்ததன் காரணமாக பூமியில் ஒருவர் உயிரிழந்தது இதுவே
முதல் முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.