
புதுடில்லி: கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை
ஈடுசெய்யும் வகையில் மாற்று கல்வி காலண்டரை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது
என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பார்லி.,யில்
தெரிவித்தார்.கொரோனா தொற்றினால் ஆன்லைனில் பள்ளி வகுப்புகள் நடைபெறுகின்றன.
இது குறித்து என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை செய்திருந்தது. அது குறித்து ராஜ்யசபாவில்
ஜோதிராதித்யா சிந்தியா கேள்வி எழுப்பியிருந்தார். 'அந்த ஆய்வுகள் முடிந்து
அதன்படி கற்றலை மேம்படுத்தும் மூன்று வகையான வழிகாட்டுதல்கள்
தயாரிக்கப்பட்டுள்ளது' என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
தெரிவித்தார்.அவர் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: ஜூலை மாதத்தில்
கேந்திரியா வித்யாலயா, நவோதயா, மற்றும் சி.பி.எஸ்.இ ஆகியவற்றின் உதவியுடன்
என்.சி.இ.ஆர்.டி ஆன்லைன் வகுப்புகள் குறித்து புரிந்துகொள்ள கணக்கெடுப்பை
நடத்தியது.
ஊரடங்கினால் மாணவர்களிடையே கற்றல் இழப்பு பிரச்னை
ஏற்பட்டுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாற்று கல்வி காலண்டர்
தயாரிக்கப்பட்டுள்ளது.மூன்று வகையாக மாணவர்களை பிரித்து அவர்களின் கற்றலை
மேம்படுத்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சேவைகள் இல்லாத
மாணவர்கள், டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த கட்டுபாடு கொண்டவர்கள்,
டிஜிட்டல் சாதனங்கள் வைத்துள்ளவர்கள் என பிரித்துள்ளோம். மாற்று கல்வி
காலண்டர் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.