இந்திய அரசு நடத்திய தேசிய குடும்பநல ஆய்வு -5இன் தரவுகள் இந்தியர்களிடையே ரத்த சோகை அதிகரித்து வரும் கவலைக்குரிய போக்கைக் காட்டுகின்றன.
இந்தியாவில் 15-49 வயதுடைய ஆண்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினருக்கும், அதே வயதுடைய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கும் ரத்த சோகை உள்ளது தெரியவந்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான குழந்தைகளுக்கு ரத்த சோகை உள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளில் என்ன உள்ளது, ரத்த சோகை என்றால் என்ன, அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்ன, ரத்த சோகை எந்த அளவுக்கு ஆபத்தானது, தவிர்ப்பதற்கான வழிகள், அதைத் தவிர்க்க உண்ணவேண்டிய உணவுகள் ஆகியவற்றை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
ரத்த சோகை - இந்தியா, தமிழ்நாட்டு பெண்கள் நிலை என்ன?
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய அளவில் குழந்தை பெறும் வயதுள்ள பெண்களுக்கு ரத்த சோகை அதிகரித்துள்ளதையே தரவுகள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் முந்தைய ஆண்டுகளைவிட குறைந்திருந்தாலும், அதில் கவலைப்பட வேண்டிய ஒரு தகவலும் உள்ளது.
2019-2021 காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்பநல ஆய்வு -5இல், 15-49 வயதாகும் பெண்களில் 57% பேருக்கும், அந்த வயதுக் குழுவின் ஒரு பகுதியான 15-19 வயதாகும் பெண்களில் 59.1% பேருக்கும் ரத்த சோகை உள்ளது தெரிய வந்தது.
2015-16இல் நடத்தப்பட்ட தேசிய குடும்பநல ஆய்வு - 4, 15-49 வயதாகும் பெண்களில் 53.1% மற்றும் 15-19 வயதாகும் பெண்களில் 54.1% பேருக்கும் ரத்த சோகை இருந்ததாகக் கூறுகிறது.
15-49 வயதுடைய ஆண்களில் ரத்த சோகை இருப்பவர்களின் விகிதம் தேசிய குடும்பநல ஆய்வு - 4 காலகட்டத்தில் 22.7 சதவிகிதத்தில் இருந்து, ஆய்வு -5 காலகட்டத்தில் 25 சதவிகிதமாகவும், 15-19 வயதுடைய ஆண்களில் அது 29.2 சதவிகிதத்தில் இருந்து 31.1 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.
குழந்தைகளையும் ரத்த சோகை விட்டுவைக்கவில்லை. பிறந்து 6 முதல் 59 மாதம் ஆகியுள்ள குழந்தைகளிடையே நிலவும் ரத்த சோகை விகிதமும் 2015-16இல் 58.6 சதவிகிதத்தில் இருந்து, 2019-21 காலகட்டத்தில் 67.1% ஆகியுள்ளது.
குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைத்து குழுவினரிடையேவும் ரத்த சோகை பாதிப்பு நகர்புறப் பகுதிகளில் இருப்பவர்களை விட கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு அதிகமாக உள்ளதை தேசிய குடும்பநல ஆய்வு -4 மற்றும் 5இன் தரவுகள் வெளிக்காட்டுகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2015-16இல் 15-49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 55 சதவிகிதமாக இருந்த ரத்த சோகை, 2020-21இல் 53.4 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது. 15-19 வயதினரிடையே இது 54.2 சதவிகிதத்தில் இருந்து, 52.9 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது.
15-49 வயதில் இருக்கும் ஒட்டுமொத்த பெண்களுக்கு ரத்த சோகை குறைவாக இருந்தாலும், இதே வயதுக் குழுவில் இருக்கும் கருவுற்ற பெண்களுக்கான ரத்த சோகை 44.4 சதவிகிதத்தில் இருந்து 48.3 சதவிகிதம் ஆகியுள்ளது. ரத்த சோகை பாதிப்பு முக்கியமாக இருக்கக் கூடாதவர்கள் கருவுற்ற பெண்கள்தான் எனும்போது இந்த விகிதம் உயந்திருப்பது நிச்சயம் நல்ல சமிக்ஞை அல்ல.
உலகெங்கிலும் ஐந்து வயதுக்கும் குறைவான 42% குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களில் 40% பேருக்கும் ரத்த சோகை குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளம். அப்படியானால் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ரத்த சோகை பாதிப்பு விகிதம் சர்வதேச சராசரியைவிட அதிகம்.
ரத்த சோகை என்றால் என்ன? பெண்களுக்கு அதிக பாதிப்பு இருப்பது ஏன்?
ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்குக் குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உலகம் முழுவதுமே ஆண்களை விடவும் பெண்களுக்கே ஒப்பீட்டளவில் அதிகமாக ரத்த சோகை உள்ளது. குறிப்பாக குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு ரத்த சோகை குறைபாடு அதிகம்.
மாதவிடாய், மகப்பேறு போன்றவை காரணமாக பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால் பெண்களிடையே ரத்த சோகை அதிகமாக இருக்கிறது. மகப்பேறின்போது தாய் இறப்பது, பிரசவத்தின்போது ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்புகளுக்கு உள்ளாவது போன்றவற்றை ரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் கோ. ரம்யா.
ரத்த சோகை எந்த அளவுக்கு ஆபத்தானது?
குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகை குறைபாடு குழந்தைப் பருவத்திலேயே சரி செய்யப்படாவிட்டால், அதுவே ஒரு நச்சுச் சுழல் ஆகிவிடும் என்கிறார் மருத்துவர் ரம்யா.
ஒரு பெண் குழந்தைக்கு ரத்த சோகை இருப்பது குழந்தைப் பருவத்திலேயே சரி செய்யப்படாவிட்டால், அது பூப்படைந்த பின்னரும் தொடர வாய்ப்புண்டு. அதன்பின் மாதவிடாயின்போது மேலும் ரத்த இழப்பு ஏற்பட்டு, அக்குழந்தை வளர்ந்த பெண் ஆனபின்னும் ரத்த சோகையுடன் இருக்கக்கூடும். அப்பெண் திருமணமாகி கருவுற்றால் அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கும் ரத்த சோகை இருக்கும் என்கிறார் அவர்.
ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ரத்த சோகை குறைபாடு இருந்தால் அவருக்கு குறைப் பிரசவம், மகப்பேறின்போது அதீத ரத்தப் போக்கு, ரத்த அழுத்தம் அதிகரித்தல், குழந்தையின் எடை குறைதல், மகப்பேறுக்கு பின் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போதல், பிரசவத்துக்கு பிந்தைய உடல்நலக் கோளாறுகள் உண்டாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம் எனவும் அந்த மருத்துவர் எச்சரிக்கிறார்.
ரத்த சோகை எதனால் உண்டாகிறது? தடுக்க என்ன வழி?
இரும்புச் சத்து பற்றாக்குறையால் பெரும்பாலும் ரத்த சோகை உண்டாகிறது. ஃபோலேட் (விட்டமின் - பி9), விட்டமின் - பி12, விட்டமின் - ஏ குறைபாடு ஆகியவையும் ரத்த சோகை உண்டாக முக்கியக் காரணிகளாக இருக்கின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பு.
மலேரியா, காசநோய், ஹெச்.ஐ.வி, ஒட்டுன்னிகளால் உண்டாகும் நோய்கள், மரபணு ரீதியாக வரும் ஹீமோகுளோபின் நோய்கள் (haemoglobinopathies) ஆகியவையும் ரத்த சோகையை உண்டாக்கும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக நிலவும் வறுமையால் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு, சமூக - பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருப்பவர்கள்கூட சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவு (balanced-deit) உட்கொள்ளாதது ஆகியவை ரத்த சோகை ஏற்பட வழிவகுக்கிறது என்கிறார் ரம்யா.
'அனீமியா முக்த் பாரத்' (ரத்த சோகை இல்லாத இந்தியா) போன்ற திட்டங்கள் மூலம் இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை வழங்குதல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடல் புழு நீக்கம் செய்தல், விழிப்புணர்வு பிரசாரங்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டாலும் குழந்தைப் பருவம் முதலே ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் ரம்யா.
அனைத்து ஊட்டச்சத்துகளும் நிரம்பிய, குறிப்பாக இரும்புச்சத்து மிக்க, சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றினால் ரத்த சோகையைத் தவிர்க்க முடியும் என்கிறார் அவர்.
நுண்-ஊட்டச்சத்துகள் (micro-nutrients) உணவில் சேர்க்கப்படுவது மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், விட்டமின்கள் மற்றும் தாதுக்களை மாத்திரை வடிவில் உட்கொள்வது ஆகியவற்றை பரிந்துரைக்கும் உலக சுகாதா அமைப்பு, நோய்க் கட்டுப்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாடு, மகப்பேறு சார்ந்த உடல்நலனைப் பராமரித்தல் ஆகியவற்றையும் பராமரிக்க வேண்டும் என்கிறது.
இதுமட்டுமல்லாமல் வறுமை, விழிப்புணர்வின்மை, பாலின பாகுபாடு போன்ற அடிப்படை காரணிகளையும் சரிசெய்வதே பெண்களை அதிக அளவில் பாதிக்கும் ரத்த சோகையை அழிக்கும் வழி என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.
என்ன உணவுகள் ரத்த சோகை வராமல் தடுக்கும்?
இந்தியாவில் ரத்த சோகை உண்டாகப் பரவலான காரணமாக இருப்பது இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறைதான் என்கிறார் மருத்துவர் ரம்யா.
கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற விட்டமின் - சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும். இரும்புச் சத்துக்காக நாம் உட்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து நாம் எதை உண்கிறோம் என்பது குறித்தும் அறிந்து வைத்திருப்பது முக்கியம்; ஏனெனில் சில உணவுகள் இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும், வேறு சில உணவுகள் தடுக்கும் என்கிறார் மருத்துவர்.
வயிறு நிறைந்திருக்கும்போது இரும்புச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதும் குறைவாகவே உறிஞ்சப்படும் .
இரும்புச்சத்து தவிர ஃபோலிக் ஆசிட், ஜின்க், விட்டமின் - பி12 ஆகியவை நிறைந்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
இதேபோல கொக்கிப்புழு நீக்கமும் ரத்த சோகை வராமல் தடுக்க முக்கியம் என்று கூறும் மருத்துவர் அதனால்தான் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகாலத்தில் அதற்கான மருந்துகள் கொடுக்கப்படுவதாகக் கூறினார்.